மும்பை

பிஎம்சி வங்கியில் முதலீடு செய்திருந்த மற்றொரு முதலீட்டாளர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

பிஎம்சி வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் வாராக்கடன்கள் மிக மிக அதிகரித்ததால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.   இதையொட்டி ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தினம் ரூ.1000 வீதம் மாதத்துக்கு ரூ.25000 மட்டுமே வங்கியில் இருந்து எடுக்க அனுமதி அளித்துள்ளது.    ஏராளமான முதலீட்டாளர்கள் வங்கியின் நிலை கண்டு அதிர்ந்துள்ளனர்.

நேற்று முன் தினம் அதாவது திங்கள் அன்று மும்பையைச் சேர்ந்த 51 வயதான சஞ்சய் குலாட்டி என்னும் இந்த வங்கி முதலீட்டாளர் மரணம் அடைந்தார்.   ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரிந்த சஞ்சய் அந்நிறுவனம் மூடப்பட்டதால் பணி இழந்திருந்தார்.   அவர் பி எம் சி வங்கியில் ரூ.90 லட்சம் முதலீடு செய்திருந்தார்.   வங்கியின் நிதி நிலையைக் கண்டு அதிர்ந்த அவர் திடீரென மரணம் அடைந்தார்.

மும்பையின் முலுந்த் பகுதியில் வசிக்கும் 61 வயதான ஃபடோமல் பஞ்சாபி என்பவர் இந்த வங்கியில் தனது பணம் அனைத்தும் முதலீடு செய்துள்ளார்.    வங்கியின் தற்போதைய நிலையால் பஞ்சாபி மிகவும் மனத்துயரம் அடைந்துள்ளார்.   தினமும் அவர் வங்க்குச் சென்று போராட்டங்களில் கலந்துக் கொண்டு விவரங்களைக் கேட்டறிவார்.

கடந்த மார்ச் மாதம் மனைவியை இழந்த இவருக்கு இவருடைய மகன் விலாஸ் மற்றும் கீதா ஆகியோர் ஆறுதல் கூறி வந்தனர்.  தற்போது தனது முதலீடு திரும்பி வராது என்னும் நிலையில் நேற்று வங்கிக்குச் சென்ற பஞ்சாபிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  அவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.   அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மரணங்களும் பி எம் சி வங்கி முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகவும் மனத்துயரத்தை அளித்துள்ளது.