ஆணவக்கொலை நடந்த கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு பயங்கரம்!: காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் தம்பதி!

ணவகொலை நடந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை கொலை செய்வதற்காக, கொடூர ஆயுதங்களுடன் கொலைகார கும்பல் விரட்ட.. நல்ல வேளையாக தம்பதியினர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ்( வயது22) சுவாதி (வயது19)  காதல் தம்பதியினர்,   சுவாதியின் பெற்றோர் மற்றும்  உறவினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆணவக்கொலை நடந்த பத்து நாட்களில்,  மீண்டும் ஒரு சம்பவம் இன்று கிருஷ்ணகிரியில் நடந்திருக்கிறது.  இதில் இளம் காதல் தம்பதியினர் உறவினர்களால் காரில் விரட்டப்பட அவர்கள் தப்பித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த குருவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). இவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக கார் வைத்து ஊத்தங்கரையில் இயக்கி வருகிறார்.

கல்லாவியை அடுத்த வெங்கடதாம்பட்டியில் வசிப்பவர் செட்டிக்குமார், இவரது மகள் சுகன்யா (21) இவர் பிஎஸ்ஸி கணிதம் படித்துவிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சிவகுமாருக்கும், சுகன்யாவுக்கும்  அறிமுகமாகி, பிறகு காதலாக கனிந்திருக்கிறது. இவர்கள் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்  கடந்த 16-ம் தேதி இருவரும் போச்சம்பள்ளி அருகேயுள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில் அவர்களை, சுகன்யாவின் உறவினர்கள் தேடி வந்தனர்.

முன்னதாக தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சிவகுமாரும், சுகன்யாவும் போச்சம்பள்ளி சப்.ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இன்று திருமணம் பதிவு செய்வதாக இருந்தது.

இன்று மதியம் மணமக்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் மணமகன் சிவக்குமாரின்  உறவினர்களுடன்  பனங்காட்டூரிலிருந்து காரில் போச்சம்பள்ளி சப்ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர் போச்சம்பள்ளி பிரதான சாலையில் வரும்போது அவர்களை இரண்டு கார்களில் சுகன்யாவின் உறவினர்கள் துரத்த துவங்கினர். .

இதையடுத்து முக்கிய சாலையில் இருந்த போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் காரை உள்ளே விட்டு மணமக்கள் இன்ஸ்பெக்டர் கமலேஷிடம் தஞ்சமடைந்தனர். காவல் நிலையத்தில் மணமக்கள் தஞ்சமடைந்ததை கண்ட துரத்திவந்த கும்பல் தங்கள் கார்களை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டது.

மணமக்களை விசாரித்த ஆய்வாளர் கமலேஷ் இது குறித்து விசாரணை நடத்த கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். மணக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க காவல்துறை வாகனத்திலேயே அவர்களை அனுப்பி வைத்தார்.

தற்போது தம்பதி மற்றும் உறவினர் கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மணப்பெண் சுகன்யா வீட்டாரையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.  ஏற்கெனவே ஆணவக்கொலை ஒன்று நடந்த நிலையில் தற்போதைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#terrorincident #Krishnagiri #Honourkilling  #couple #refuge #policestation

 

You may have missed