டெல்லி: மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு செய்து  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுஉள்ளது.

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பரோலில் வெளியே உள்ள பேரறிவாளன் தரப்பில், உடல்நிலையை காரணம் காட்டி,  மேலும் 3 மாதம் பரோல் நீட்டிப்புக்கோரி இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்தமனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு  ‘இரண்டு வருட காலத்துக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி உள்ளது. ஆனால், பேரறிவாளனுக்கு நவம்பர் 9ந்தேதி வரை  வழங்கப்பட்டுள்ள பரோலையும் சேர்த்து அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதனால், மேலும் பரோல் வழங்க முடியாது என்று தெரிவித்ததுடன், உடல்நலப் பாதிப்பு என கூறும், பேரறிவாளன் 25 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் 200 கி.மீ. தூரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது’ என்றும் எதிர்ப்பி தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து,  பேரறிவாளன் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25% அடைப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை பெற 4 வாரமாவது பரோல் தேவைப்படுகிறது. எனவே, குறைந்தது 4 வாரத்துக்காவது பரோலை நீட்டிக்க வேண்டும்’ எனக் கோரினார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பரலோடு கூடுதலாக ஒரு வாரத்துக்குப் பரோலை நீட்டித்து  உத்தரவிட்டதுடன்,  பரோலை நீட்டிப்பது இதுதான் கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும்  திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும்,  பேரறிவாளன் வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து, பேரறிவாளன்  வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பேரறிவாளன் மனு மீது கடந்த 23ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஒரு வாரம் பரோல் நீட்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒருவாரம் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.