குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு : மற்றொரு சாட்சி பல்டி
மும்பை
சோராபுதின் ஷேக் குஜராத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு சாட்சி தனது சாட்சியத்தை மாற்றி உள்ளார்.

சோராபுதின் ஷேக் என்பவர் ஒரு நிழல் உலக தாதா என அறியப்பட்டவர். கடந்த 2005 ஆம் வருடம் நவம்பர் மாதம் இவரும் இவர் மனைவி கௌசர் பீ ஆகிய இருவரும் குஜராத் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் இவருடைய நெருங்கிய கூட்டாளியான பிரஜாபதி கடந்த 2006 ஆம் வருடம் டிசம்பர் மாதம் குஜராத் – ராஜஸ்தான் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார், இவை உண்மையான என்கவுண்டர்கள் அல்ல என புகார் எழுந்தது.
தற்போது சிபிஐ நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கில் ஹரிஷ் குமார் என்பவரும் சாட்சிகளில் ஒருவர் ஆவார். இவர் குஜராத் மாநிலம் பதானில் ஒரு மொபைல் கடை வைத்துள்ளார். இவர் தனது உறவினரைக் காண அம்பாஜி நகர மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது பிரஜாபதியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டுகளையும், ரத்தக் கறை படிந்த துணியையும் இவர் நேரில் பார்த்தாக கையொப்பம் இட்டிருந்தார்.
ஆனால் தனக்கு அவைகளைக் காட்டாமலேயே தன்னிடம் காவல்துறை கையொப்பம் பெற்றதாக சிபிஐயிடம் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்திருந்தார். நேற்று நடந்த சிபிஐ நீதிமன்ற விசாரணையில் ஹரிஷ் குமார் தனது உறவினர் யாரும் அம்பாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தாம் அம்பாஜி காவல் நிலையத்துக்கு ஒரு சொந்த வேலையாக சென்ற போது காவல்துறை அவரிடம் கையொப்பம் பெற்றதாக தெரிவித்துள்ளார். வேறு எந்த விவரமும் தமக்கு தெரியாது எனவும் கூறி உள்ளார்.
இந்த வழக்கின் மொத்த சாட்சிகள் 125 பேர் ஆவார்கள் இவர்களில் இது வரை ஹரிஷ் குமாருடன் சேர்ந்து 74 பேர் தமது சாட்சியத்தை மாற்றி உள்ளனர். .இந்த வழக்கில் சிபிஐ 38 பேர் மீது குற்றப்பத்திரிகை அளித்தது. அதில் 15 பேர் மும்பை நீதிமன்றத்தில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.