சென்னை:

மிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை  அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்கு ரேசன் பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும்  எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம். வேலைக்காக வெளியூர் சென்று பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இணைந்துள்ளன. ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகமும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.  தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்  ஒரே நாடுஒரே ரேசன் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமலுக்கு வரும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.