Random image

தாலிபான் முக்கிய தலைவர் ஜலாலுதீன் மரணம்

காபூல்

தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜலாலுதீன் ஹக்கானி உடல்நிலை சீர்கேட்டால் நேற்று மரணம் அடைந்தார்.

ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ஹக்கானி அமைப்பை அமைத்தவர் ஜலாலுதீன் ஹக்கானி.   ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் கல்வி பயின்றவர் என கூறப்படுகிறது.  இவர் ரஷ்யாவுக்கு எதிராக ஹக்கானி அமைப்பை கடந்த 1970களில் தொடங்கினார்.   அதன் பிறகு 1996ல் தனது இயக்கத்தை தாலிபன் தீவிர வாத இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார்.

அவர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி செய்த போது அமைச்சராக இருந்தார்.  அதன் பிறகு அமெரிக்க படை எடுப்பால் தாலிபன்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.    அதில் இருந்து தலைமறைவாக இருந்த இவர் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக பல பயங்கர வாத தாகுதல்கள் நிகழ்த்தி உள்ளார்.

இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.   இவர் கடந்த 2015ல் மரணம் அடைந்ததாக செய்தி வந்தது.   அதை தாலிபன்கள் மறுத்தனர்.   இவர் நேற்று உடல் நிலை சீராகாமல் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   அதை தாலிபன்கள் உறுதி செய்துள்ளனர்.