ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ‘’ராகுல் மோடி’’..

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ‘’ராகுல் மோடி’’..

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பணிகளுக்கு அலுவலர்களைத் தேர்வு செய்யும் ‘சிவில் சர்வீஸ்’’ தேர்வில்  வெற்றி பெறுவது ‘குதிரைக்கொம்பு’ பெறுவது போன்ற அசாதாரணமான விஷயம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் 829 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வில் அரியானாவைச் சேர்ந்த பிரதீப் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆனால் 420 வது இடத்தை (ரேங்க்) பிடித்த மாணவர் சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளார்.

ஏன்?

அவர் பெயர்-’’ ராகுல் மோடி’’.

பிரதமர் பெயரையும், காங்கிரஸ் தலைவர் பெயரையும் ஒரு சேர தன் பெயரில் கொண்டுள்ளதால், முதலிடம் பிடித்த மாணவரை விட்டு விட்டு, ‘ராகுல் மோடி’’ பெயரே வலைத்தளங்களில் அதிக அளவில்,அடிபடுகிறது.

‘’இது- இந்த நூற்றாண்டின் பெரும் இணைப்பு’’ என ஒருவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இன்னொருவர் ’’ராகுல் மோடி! நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளரா ? அல்லது பா.ஜ.க. ஆதரவாளரா?’’என்று வினா எழுப்பியுள்ளார்.

‘’ஒருவரின் பெயரை வைத்து  அவரை ‘ட்ரோல்’ செய்வதை நிறுத்துங்கள்..இந்த தேர்வில் வெற்றி பெற அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள்’’ என வேறொருவர் சாடியுள்ளார்.

-பா.பாரதி.