பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்…

சென்னை: பிரிட்டனில் இருந்து  இந்திய வந்துள்ள 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், அதில், தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தமிழக  சுகாதார துறை முதன்மை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதியவகையிலான கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் இருந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் வழக்கமானதை விட அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து  தாயகம் திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த  நவம்பர்  மாதம் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. சுமார்  33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில்,  114 பேருக்கு கொரோனா உறுதியானது.  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் ரத்த மாதிரி, உருமாறிய கொரோனா சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில்  6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது.

இந்த 6 பேரில்  ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் உள்பட அனைவரும் கடந்த ஒரு வாரமாக தனித்தனி அறையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டனில் இருந்து  இதுவரை 1600 பேர் சென்னை திரும்பி உள்ளதாகவும், அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களின் ரத்த மாதிரிகள் உருமாறிய கொரோனா தொற்று சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது  என்று கூறினார். மேலும், பிரிட்டனில் இருந்து  திரும்பியவர்களுடன்  தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.