புதுவையில் 15 வயது சிறுமியை சித்ரவதை செய்த தொழிலாளி கைது

ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியரின் 15 வயது மகளை திருமணம் செய்தார். தொடக்கத்தில் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த மணிகண்டன் நாளடைவில் மது குடித்து விட்டு அந்த சிறுமியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி புதுவை குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டாள். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல குழு தலைவர் ராஜேந்திரன் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ரெட்டியார் பாளையம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

கார்ட்டூன் கேலரி