டில்லி,
ரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார்.
ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் திட்டத்தை (ஓ.ஆர்.ஓ.பி. One Rank One Pension) சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இந்த திட்டத்தின்கீழ் பென்சன் வந்து சேரவில்லை என்றும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்று  டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கரேவால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த பரிதாப நிகழ்ச்சி,  நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், முன்னாள் ராணுவத்தினரிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரரின் வீட்டுக்கு செல்ல முயன்றபோது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் படைவீரர்களிடையே பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகள் இரண்டு மாதங்களில் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
‘20 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களில் ஒரு லட்சம் பேர் மட்டுமே ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பென்சன் பெறாமல் உள்ளனர்.
சில தொழில்நுட்ப சிரமம் அல்லது ஆவணப்படுத்தும் பிரச்சனைகளால் அவர்களுக்கு பென்சன் வழங்கப்படாமல் உள்ளது.
இந்த பிரச்சனைகள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும்’ என்றார் பாரிக்கர். முன்னாள் படைவீரர்களிடையே கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்த பாரிக்கர், குறைகள் களையப்படும் என உறுதி அளித்தார்.