ருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும். தவறாக வழிநடத்துவது போன்ற திரைப்படங்கள் தடுக்கப்பட வேண்டும். அரசும் முழு மனதோடு முழு மதுவிலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்” என்று உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி.

ஜோதிமணி
ஜோதிமணி

இந்த நிலையில் நாம் ஜோதிமணியிடம் பேசினோம்.
காதல் என்ற பெயரில் நடக்கும் கொலைகள் குறித்து உங்களது ஆதங்கத்தை முகநூலில் தெரிவித்திருக்கிறீர்கள்..
ஆமாம்.  பள்ளி, கல்லூரியிலோ, பணிபுரியும் இடத்திலோ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காதலிப்பதாக ஆண் சொன்னால் உடனே அதை பெண் ஏற்க வேண்டும்.. இல்லாவிட்டால் கொலைதான் என்பது என்ன நியாயம்?
பெண் என்பவள் ஜடப்பொருளா?  ரத்தமும் சதையும் கொண்ட உயிர்தானே அழளும்! அவளுக்கும் ஆசாபாசங்கள் சுய விருப்பு வெறுப்புகள் இருக்காதா?  ஏதோ கைப்பண்டம் போல பெண்களை நினைத்து அணுகுவதும், அவர்கள் மறுத்தால் கொலை செய்வதும் ஏற்கவே முடியாத விசயம்.
பெண்கள் படிக்கவே முடியாமல் இருந்த காலத்தில், முத்துலட்சுமி ரெட்டி  போராடி மருத்தும் படித்தார்.  இப்போது விமானம் ஓட்டுவது, எல்லை பாதுகாப்பு என்று பெண்கள் வந்துவிட்டார்கள், இந்த ஒலிம்பிக்கில் மூன்று பெண்கள்தான் பதக்கம் பெற்று இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்கள்.. இதற்கு மேலும் பெண்கள் சமமானவர்கள்தான் என்பதை எப்படி நிரூபிப்பது?
இதற்கு மேலும், பெண்களை ஜடப்பொருளாக பார்த்து, காதலை ஏற்காவிட்டால் கொல்வது என்கிற கொடூரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்த சமூகத்துக்குமேதான் அவமானம்.
"காதலிக்கலேன்னா கொன்னுடுவேன்" :"சேது" படகாட்சி
“காதலிக்கலேன்னா கொன்னுடுவேன்” :”சேது” படகாட்சி

இப்படி நடப்பதற்கு திரைப்படங்களும் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்..
அது இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்து அவர்களை முட்டாளாக, மூர்க்கர்களாக மாற்றி கடைசியில் கொலைகாரனாகவும் ஆக்கிவிடுகிறது என்பதை உணருங்கள்.
சமீப காலமாக தமிழ்த்திரைப்ட சூழலில் நல்ல மாற்றம் தென்படுகிறது. தனது பழைய மோசமான பாதையில் இருந்து விலகி, நல்ல மாற்றுத்தடத்தில் திரைத்துறை சென்று கொண்டிருக்கிறது. “வெண்ணிலா கபடிக்குழு” “தர்மதுரை” “அங்காடி தெரு” போன்ற நல்ல  திரைப்படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ரஜினியின் கபாலி படத்திலேயே முதன் முறையாக, பெண்களை உயர்வாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட படங்களும் வெற்றி பெறத்தானே செய்கின்றன? பெண்ணை கொச்சைப்படுத்தி எடுத்தால்தான் படம் வெற்றி அடையும் என்பதில்லையே. ஒருவேளை அப்படி இருந்தாலும் தவறான விசயங்களை எடுக்கலாம் அப்படிச் செய்தால் அது கலை அல்ல. வேறு.
திரைத்துறையினரும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தான். அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்.  எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிற நிலையில்தான்  நமது சமுதாயம் இருக்கிறது.
இந்த நிலையை மாற்ற திரைத்துரையினருக்கும் பங்கு இருக்கிறது. இதை அவர்கள் உணர்ந்து படம் எடுக்க வேண்டும்.
கே: திரைப்படத்தில் மோசமான காட்சிகள் வருகின்றன என்பது ஒருபுறம். இதை கவனக்கத்தானே சென்சார் போர்டு இருக்கிறது? நீங்களும் சென்சார் போர்டு உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். சென்சார் போர்டு நடவடிக்கை எப்படி?
ப: பெண்களை இழிவு படுத்தி வசனமோ காட்சியோ இருந்தால் சென்சார் போர்டு சட்டப்படி அது தவறு. டெலிகிரேட்டிங் விமன் என்று ஒரு சட்டப் பிரிவே உள்ளது.  மோசமான காட்சி மற்றும் வசனத்தை நீக்குவது சென்சார் போர்டின் உரிமை மட்டுமல்ல.. கடமையும் கூட.
நானும் போர்டில் இருந்த போது கிடைத்த அனுபத்தைச் சொல்கிறேன். மோசமான காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நீக்க வேண்டும் என்று சொல்வோம். பிறகு இன்னொரு கமிட்டி அமைத்து அதே படத்தை பார்க்க வைப்பார்கள். அதில் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். படத்துக்கு சாதமானவர்களை பார்க்கவைத்து ஓகே வாங்கி படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள்.
தவிர நியாயமான எதிர்ப்புகளைத் தெரிவித்தால், அப்படிப்பட்ட  உறுப்பினர்களை பெரிய நடிகர்களின் படத்துக்கு (சென்சார் காட்சிக்கு) அழைக்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட கூத்துக்களும் நடந்திருக்கின்றன. திரைத்துறையினருக்கு எப்படி இந்த சமுதாயத்தில் பொறுப்பு இருக்கிறதோ, அதே போல சென்சார் போர்டு உறுப்பினர்களும் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்.
சீர்காழி அருகே நடந்த சம்பவம்.
சீர்காழி அருகே நடந்த சம்பவம்.

தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடந்துவருகின்றன. தமிழக அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதாக தெரியவில்லை. முதலில் மதுக்கடைகளை மூடட்டும். முழு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதை சரியானபடி செய்யட்டும்.
கரூரில் கல்லூரி வகுப்புக்குள் நுழைந்து மாணவியை கொலை செய்த இருபத்தியோரு வயது இளைஞன், அப்போது முழு போதையில் இருந்திருக்கிறான்.  இப்படி குற்றங்கள் நடக்க காரணமாக இருக்கும் மதுவை, ஒரு கட்டுக்குள் வைக்கவாவது தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள்கூட சீருடையில் மது வாங்கும் காட்சியும், போதையில் தள்ளாடும் காட்சியும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியானபடிதான் இருக்கின்றன. 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கெனவே இருக்கும் சட்டத்தையாவது இந்த அரசு முறைப்படி அமல் படுத்த வேண்டும்.
ஜோதிமணி
ஜோதிமணி

நீங்கள் தனிப்பட்ட முறையில் கல்லூரிகளில் வகுப்பு எடுக்கப்போவதாக தகவல் வந்ததே..
தனிப்பட்ட முறையில் அல்ல. பெண்ணிய இயக்கங்களுடன் இணைந்து, ஆடல், பாடல், நாடகம் மூலம் ஆண் – பெண் பாலின சமத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சியாக அது இருக்கும். இப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறேன். மற்ற கல்லூரிகளிடம் பேச வேண்டும். நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நிகழச்சி, பாலின சமத்துவத்தை உணர்த்துவதாக இருக்கும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை, பாலின சமத்துவ வகுப்புகளை ஆரம்ப கல்வியிலிருந்து வைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் நல்ல விளைவுகள் ஏற்படும்.
பாலின சமத்துவ வகுப்பு, பாலின கல்வி என்பதை வேறுவிதமாக புரிந்துகொண்டு எதிர்க்கும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றனவே..
உண்மைதான். அவர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. பாலியல்  கல்வி என்பது  ஆண் பெண் உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள், அந்த நேரத்து மனநிலை அப்போது ஏற்படும் குழப்பங்களை தெளிவு படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது.  மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு பாலின கவுன்சிங் கொடுக்க என்றே ஒருவரை நியமித்திருப்பார்கள். வளரும் பருவத்தில் இது மிக அவசியம்.  இது புரியாமல்தான் சிலர் பாலியல் கல்வியை எதிர்க்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நாங்கள் கல்லூரியில் நடத்த இருப்பது பாலின சமத்துவத்தை வலியுருத்தும் நிகழ்ச்சிகள்.
இதுபோன்ற ஒருதலைக் காதல் கொலைகளில் ஆணாதிக்கம் என்பது அடிப்படை காரணமாக இருக்கிறது. இதைப் போக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
ஆண் பெண் சமத்துவம் என்பது குழந்தைப் பருவத்தில் இருந்தே துவங்க வேண்டும், குழந்தகளில் ஆண் பெண் என வேறுபடுத்திப் பார்ப்பதை நாம் தவிர்க்க வேண்டும். அதன் பிறகு பாலியல் கல்வி, கலாச்சார சீரழிவை தடுப்படு என்று நிறைய இருக்கின்றன. முதல் அடியை, நமது குடும்பத்தினர்தான் எடுத்து வைக்க வேண்டும்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு