காசி இந்து பல்கலைக்கழகம் : ஓரின சேர்க்கையால் மாணவி விடுதியில் இருந்து வெளியேற்றம்?

காசி

காசி இந்து பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மகிளா மகா வித்யாலயா கல்லூரி மாணவியர் விடுதியில் இருந்து ஒரு மாணவி ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர் எனக் கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.

காசி இந்துப் பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று.  இந்தப் பல்கலைக்கழகம் பல பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்தி வருகிறது.  அவைகளில் ஒரு பெண்கள் கல்லூரி மகிளா மகா வித்யாலயா ஆகும்.

இந்தக் கல்லூரியின் மாணவியர் விடுதியில் இருந்து ஒரு மாணவி வெளியேற்றப்பட்டுள்ளார்.  கல்லூரி நிர்வாகிகள் மாணவியின் பெற்றோரிடம் அந்த மாணவிக்கு ஓரினச் சேர்க்கை நாட்டம் அதிகம் இருப்பதால் வெளியேற்றப் படுவதாகவும்,  உடனடியாக அந்த நோயை போக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.  ஆனால் அந்த மாணவி விடுதியில் இருந்து மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார். கல்லூரியில் இருந்து நீக்கப்படவில்லை.

ஆனால் விடுதியின் பொறுப்பாளரான நீலம் அத்ரி என்னும் ஆசிரியை, “அந்த மாணவிக்கு ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளது.  அதனால் தனக்கு தந்த வீட்டுப் பாடங்களை தன் விடுதித் தோழியர் செய்து தரவேண்டும் எனவும் அப்படியில்லை எனில் தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டி வந்தார்.  அவரைப் பற்றி இது போல் புகார்கள் நிறைய வந்ததால் அவர் விடுதியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.  மேலும் அவரிடம் ஓரின சேர்க்கை நாட்டம் இல்லை எனவும்,  அந்தப் பெண் இப்படி பயமுறுத்துவதால் விடுதியில் உள்ள மற்ற பெண்கள் அவரிடம் இருந்து விலகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடன் பயிலும் மாணவியர்கள் முறையான விசாரணை இன்றி அந்தப் பெண் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் அந்தப் பெண் இது போல குற்றச்சாட்டுக்கு ஆளானதால் மற்ற பெண் மாணவிகளுடன் அதே கல்லூரியில் கல்வியை தொடர தயங்குவதாகும் வருத்தம் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், “இந்த இரண்டில் எதை நம்புவது எனவே தெரியவில்லை ஓரினச் சேர்க்கை நாட்டம் என்பது கல்லூரி நிர்வாகம் குறிப்பிட்டது போல ஒரு நோய் அல்ல.  அதை நோய் எனச் சொல்லும் நிர்வாகம் நிச்சயமாக சமகாலத்தை புரிந்துக் கொள்ளாதவர்கள்.  மேலும் அந்தப் பெண் மற்றவர்களை இது போல மிரட்டினார் என்றால் அவருக்கு தன்னை எல்லோரும் தனிமை படுத்துகிறார்கள் என்னும் எண்ணமே ஆகும்.  மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் செய்யும் யுக்தியே இது.   அதற்கு அவருக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.  இவை எதையும் செய்யாமல் கல்லூரி நிர்வாகம் செய்தது அந்தப் பெண்ணுக்கு ஒரு அநீதி” என கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.