கொச்சி :
கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து  கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு பூங்கா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி யானை ஒன்று பசியால் அந்த பகுதி கிராமப்பகுதிகளில் சுற்றி உள்ளது. அந்த யானைக்கு அங்கிருந்தவர்கள் அன்னாசி பழத்துக்கள் வெடியை வைத்து கொடுத்துள்ளனர். அந்த பழத்தை சாப்பிட்ட யானையின் தாடை மற்றும் நாக்கு உள்பட பல பகுதிகளில்  வெடி வெடித்ததால் பலத்த சேதமடைந்து, உயிருக்கு போராடியது.  வெடியால் ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல்,  அந்த பகுதியில் இருந்த குட்டைக்குள் இறங்கி தண்ணீருக்குள் இறங்கி நின்று, தனது தாடையை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு தவித்தது.
அந்த யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில், வெளியே வர மறுத்த அந்த யானை, நீரிலேய ஜலஜமாதி அடைந்தது.  இந்த சம்பவம் உலகம்  முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மத்தியஅரசும் இதுகுறித்து உடனே அறக்கை அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ‘இந்தக் கொடுஞ் செயலில் ஈடுபட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என,கேரள முதல்வர், பினராயி விஜயனும் அறிவித்திருந்தார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் மீது  சந்தேகம் எழுந்துள்ளதாகவும்,  அதன் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.