சென்னை :
திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நான்கு நாள்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், கோயம்பேடு மார்க்கெட் ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவான்மியூர் காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக இன்று அந்த சந்தை மூடப்பட்டு அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் அப்பகுதியில் அமைக்கப்பட்ட சந்தை தற்போது அங்கிருந்து வாகனம் நிறுத்தம், வடக்கு மாட வீதி மற்றும் கிழக்கு மாட வீதி என மூன்று பகுதி பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களை கண்டறிந்து அங்கே சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு மே 6 புதன்கிழமை முதல் அவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.