போவே, கலிஃபோர்னியா

லிஃபோர்னியாவின் போவே நகரில் உள்ள யூத ஆலயத்தில் ஒரு இளைஞர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நியுஜிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச் நகரில் மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிருஷ்ட வசமாக தப்பினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டதால் உலகெங்கும் கடும் பரபரப்பு எழுந்தது.

அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் போவே ஆகும். இங்கு ஒரு யூதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியவர் ஜான் எர்னல்ட் என்னும் 19 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நியுஜிலாந்து மசூதி துப்பாக்கி தாக்குதலுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதாககூறப்ப்டுகிறது. இது குறித்து கலிபோர்னியா காவல்துறையினர் மும்முரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் ஜான் எர்னல்ட் உபயோகித்தது ஏ ஆர் 16 ரக துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது. இவ்வகை துப்பாக்கிகள் அமெரிக்காவில் பல துப்பாக்கி சூடு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத கோவிலில் 6 மாதங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத் தக்கது.