பட்டப்பகலில் பைக் ரேசில் ஒருவர் மரணம் : அண்ணாசாலையில் அதிர்ச்சி

சென்னை

சென்னை அண்ணா சாலையில் பட்டப்பகலில் நடந்த பைக் ரேசில் ஒரு இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.

சென்னையில் இரவில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.    ரேஸ் நடைபெறுவதாகக் கூறப்படும் பல சாலைகளில் காவல்துறையினர் தீவிர சோதனை முகாம்கள் அமைத்துள்ளனர்.   இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் சென்னையின் மையப்பகுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை அண்ணாசாலையில்  இளைஞர்கள் சிலர் பட்டப்பகலில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர்.   தேனாம்பேட்டையில் இருந்து அந்த இளைஞர்கள் 7 பைக்குகளில் கடும் வேகமாக சென்றுள்ளனர்.  ஜெமினி மேம்பாலத்தை கடந்து அவர்கள் ஸ்பென்சர் பிளாசா எதிரில் சென்ற போது இரு வாகனங்கள் மோதி உள்ளன.   அதனால் ஒரு வாகனத்தில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு  சாலை தடுப்பு சுவரில்  விழுந்துள்ளனர்.

இருவரும் விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட மற்ற இளைஞர்கள் அங்கிருந்து பைக்கில் பறந்தோடி விட்டனர்.   அருகில் இருந்த காவலர்கள் அடிபட்ட இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த இரு இளைஞர்களில் விக்ரம் என்னும் இளைஞர் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.    மற்றொரு இளைஞரான யோகேஸ்வரன் என்பவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளார்.  தப்பி ஓடிய மற்றவர்கள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.