அரபிக்கடலில் மேலும் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு : அமைச்சர் தகவல்

டில்லி

மும்பையின் மேற்குப் பகுதியில் அரபிக்கடலில் எண்ணெய் வளங்களை ஓ என் ஜி சி நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பாராளுமன்ற இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் மும்பையின் பகுதியில் ஏற்கனவே அரசு நிறுவனமான ஓ என் ஜி சி எண்ணெய்க் கிணறுகள் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து வருகிறது.   தற்போது நாள் ஒன்றுக்கு 2,05,000 பாரல்கள் எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.   கடந்த 2016-17 ஆண்டில் சுமார் 2.55 கோடி டன் எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று விடுமுறை என்பதால் கேள்விகளுக்கான விடைகள் பாராளுமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.   அந்த விடைகளில் ஒன்றில் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “அரபிக்கடலில் நடைபெற்று வரும் கச்சா எண்ணெய் வள சோதனையில் மேலும் 9 பகுதிகளில் எண்ணெய் வளம் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இந்த இடங்களில் விரைவில் எண்ணைய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட உள்ளது.   இதன் மூலம் 3310 பாரல் எண்ணெயும், 17701 கன அடி எரிவாயுவும் ஒருநாளைக்குக் கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.