வேலூர்: வெங்காயத்தின் தொடர் விலை உயர்வு தற்போது வேறு வகையில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது. வேலூர் பிராந்தியத்தில் 450 பிரியாணி கடைகள் வரை மூடப்பட்ட நிலையில், 2000 பேர் வரை வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பழைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் பிரியாணி ஓட்டல்களுக்குப் பெயர்பெற்றது. இங்குள்ள 1200க்கும் மேற்பட்ட பிரியாணி ஸ்டால்களில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளைப் பெற்று வந்தனர்.

ஆனால், தற்போது பெரிய வெங்காயத்தின் விலை ரூ.150 என்பதாகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160 என்பதாகவும் உள்ளதால், பிரியாணி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

பல கடைகளில் வெங்காயத்திற்கு வழங்கப்படும் தயிர் பச்சடி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல பிரியாணி கடைகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், பிரியாணியின் விலையும் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளதால், பிரியாணி பிரியர்கள் தங்களின் விருப்பமான உணவை தற்போது தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால், அப்பிராந்தியத்தில் 450 கடைகள் வரை மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை நம்பியிருந்த 2000 தொழிலாளர்கள் வரை வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் ரூ.1 கோடி அளவிற்கு நடைபெற்றுவந்த பிரியாணி வியாபாரம் தற்போது ரூ.40 முதல் ரூ.50 லட்சமாக குறைந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.