சென்னை: தனியார் கலை அறிவியல் கல்லூரிகளைப் போன்று, அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், ஆன்லைன் முறையில் மாணாக்கர் சேர்க்கையை நடத்திட தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லுாரிகள், சுயநிதி பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை, ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், தமிழக உயர்கல்வித் துறை சார்பாக பொதுக் கலந்தாய்வு நடத்தி மாணாக்கர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கலை அறிவியல் கல்லுாரிகளிலும் ஆன்லைன் முறையில் மாணாக்கர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

எனவே, இந்த வழியைப் பின்பற்றி அரசு கலை அறிவியல் கல்லுாரிகளிலும் ஆன்லைன் முறையில், மாணாக்கர் சேர்க்கையை நடத்த தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் ஆன்லைனில் விண்ணப்ப முறையிலான பதிவை அறிமுகம் செய்ய மாநில உயர் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. எனவே, விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.