நெருங்கிப் பழகி பெண்களிடம் பிளாக்மெயில்..  வீடியோக்களால் சிக்கிய  ஜிம் வில்லன்..

’நான் அவனில்லை’ படத்தின் ஒரிஜினல் ஹீரோவை நாகர்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த ஒரிஜினல் ஹீரோ, நூறு (சினிமா) ஜெமினி கணேசனுக்கு சமம் என்ற திடுக்கிடும் தகவல் தமிழகத்தையே அதிற வைத்துள்ளது.

’நான் அவனில்லை‘ஜெமினி போன்றே இவனும் –

தொழில் அதிபர், வழக்கறிஞர், விமான பயிற்சியாளர் என பல்வேறு வேடங்கள் தரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் விழவைத்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளான்.

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த அந்த ஆசாமியின் பெயர், காசி. வேலையில்லா இளைஞன்.

‘ஜிம்’களில் தான் பயிற்சி செய்யும் வீடியோக்களை பணக்காரப்பெண்களுக்கு தனது மொபைல் போன் மூலம் அனுப்பி வைப்பான்.

அவனது உடல் அழகில் மயங்கி, அந்த பெண்களும் தங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை அவனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாளாவட்டத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகி, சல்லாப காட்சிகளை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ அல்லது போட்டோ எடுத்து கொள்வான்.

அந்த அந்தரங்க போட்டோக்களை அவர்களுக்கு அனுப்பி, பணம் கேட்டு மிரட்டல் விடுப்பான்.

மானத்துக்கு அஞ்சிய பெண்கள் , அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் தான், காசி ’லீலைகள்’ இருந்தன.

பின்னர் எல்லைகளை விரிவு படுத்தினான்.

சென்னை வரை வந்துள்ளான்.

அவனிடம் சிக்கி உடல், பொருள், ஆவி எனச் சகலமும் பறிகொடுத்த சென்னை பெண் டாக்டர், ஒரு கட்டத்தில் அவனது அத்துமீறலால் ஆத்திரம் அடைந்தார்.

ஆன்லைன் மூலம் தனது ’’சுயசரிதை’’யை எழுதி நாகர்கோவில் போலீசுக்கு புகாராக அனுப்பி வைத்தார்.

அதன் பேரில் கோட்டாறு போலீசார் காசியை கைது செய்துள்ளனர்.

அவனது வீட்டில் இருந்து ஆபாச குப்பைகளைச் சேமித்து  வைத்திருந்த மொபைல் போன், கம்ப்யூட்டர் கார்ட் டிஸ்க், பென் டிரைவ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

புகார் அளித்த பெண் டாக்டர் மட்டுமே காசியிடம் 7 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.

இந்த ‘தொழிலில்’ அவன் பல  லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

‘’ காசியிடம் ஏமாந்தோர் , ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கலாம்’’ என அறிவித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்’ ‘’ அந்த அபலை பெண்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்’’ என்றும் உறுதி அளித்துள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்