சென்னை திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்

சென்னை:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சென்னையில் சில திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 100 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரியும், அதற்கு மேற்பட்ட டிக்கெட்களுக்கு 28% . வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 120 ரூபாய் டிக்கெட் என்றால் 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரி சேர்த்து 153.6 ரூபாய். மேலும், GST 18%, CGST 9%, SGST 9% என்ற பெயரில் பிடிக்கிறார்கள்.

இதையே ஆன்லைன் மூலம் புக் செய்தால் 30 ரூபாய் ஆன்லைன் சார்ஜஸ் உண்டு. இந்த 30 ரூபாய்க்கு 18% ஜி.எஸ்.டி-யாக 5.4 ரூபாயை செலுத்த வேண்டும்.

ஆக, 120 ரூபாய் டிக்கெட்டுக்கு மொத்தமாக 189 ரூபாய் கொடுத்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து திரையரங்குகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தின. ஆனாலும் பலனில்லை. ஆகவே மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன.

அதே நேரம், சென்னையில் பல திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் ரசிகர்களுக்கு மேலும் 30 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுவதை தவிர்க்கவே இந்த நவடிக்கை என்று அந்த திரையரங்க நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

திரையரங்க நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கையை நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் பாராட்டியுள்ளார்.