பெங்களூரு – பள்ளியின் ஆன்லைன் வகுப்பை ஹேக் செய்து ஆபாசம் புகுத்திய மர்ம நபர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆன்லைன் வகுப்பை மர்மநபர் ஒருவர் ஹேக் செய்து, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு பெங்களூருவின் கெம்பாபுராவிலுள்ள ஜெயின் ஹெரிடேஜ் பள்ளியின் சார்பாக மாணாக்கர்களுக்கு Zoom செயலி மூலமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாகவே இந்த ஏற்பாடு.

இந்நிலையில், கடந்த மே மாதம் 21ம் தேதியன்று, பிற்பகல் 2 மணிமுதல் 2.45 மணிக்குள், ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இந்த ஆன்லைன் வகுப்பு செயல்முறையை ஹேக் செய்து, ஒரு ஆன்லைன் வகுப்பில் நுழைந்து, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

இதனால், அந்த வகுப்பை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்து உடனடியாக வகுப்பை நிறுத்தியுள்ளார். விஷயம் பள்ளி முதல்வர் அர்ச்சனா விஸ்வநாத் கவனத்திற்குச் செல்லவே, அவர் கர்நாடக சிஐடி பிரிவில் புகாரளித்துள்ளார்.

அப்பள்ளியில், 7ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை, Zoom செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.