எம்பிபிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தலாம்! தேசிய மருத்துவ ஆணையம்

சென்னை: எம்பிபிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தலாம் என்றும், கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம்   தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவக்கவுன்சில் கலைக்கப்பட்டு, தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் உருவாக்கப்பட்டு உள்ளது.  இதுவே நாடு முழுவதும் உள்ள மருத்துவம் தொடர்பான கல்வியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.  இந்த ஆணையத்தின் செயலாளலபக  ஆர்.கே.வட்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான பாட வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற கருத்தும் உலவி வருகிறது.

இந்த நிலையில், ஆர்.கே.வட்ஸ் நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  கொரோனா பரவல் நேரத்தில் மட்டும் எம்.பி.பி.எஸ். பாடங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுக்க அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் பாட வகுப்புகள் செல்லத்தக்க ஒன்றாகும். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த பாட வகுப்புகளுக்கு தேவையான செய்முறை (பிராக்டிக்கல்) மற்றும் மருத்துவ பயிற்சி (கிளினிக்கல் டிரெயினிங்) போன்றவை கல்லூரி திறந்த பிறகு மருத்துவமனைகளில் நடத்தப்படும்.

வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகம், எம்.பி.பி.எஸ். படிப்பை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தி வருவது குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த பதிலின் அடிப்படையிலேயே ஊடகங்கள் அதுபோன்று செய்தியை முன்பு வெளியிட்டு இருக்கின்றன என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.