சென்னை: தமிழக சட்டசபையில்,  இன்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை நிரந்தரமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வருவதுடன், சிலர் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இதை தடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து,  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழகஅரசு உத்தரவிட்டது.

இநத நிலையில்,  தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார்.  அதன்படி,  தடையை மீறி ஆன்லைனில் சூதாடுபவர்களுக்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை எனவும் ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு  ரூ.10 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவரச சட்டத்தை பிறப்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் தாக்கல் ஆனது.