மதுரை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மதுரை கிளை, ஆன்லைன் சூதாட்டம்  விளம்பரத்தில் தோன்றும் நடிகர், நடிகைகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

ஆன்லைன் ரம்பி உள்பட பல சூதாட்டங்களால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்., இதன் காரணமாக  , ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும். அதற்கு விளம்பர தூதர்களாக செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்பட்டுள்ளது.  இது தொட்ர்பாக  மதுரை  உயர்நீதி மன்றம் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று வழக்கறிஞர்  நீலமேகம் ஆஜராகி, ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி வக்கீல் முகம்மது ரஸ்வி பெயரில் மனு செய்துள்ளோம். அதை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என்று நேற்று கோரிக்கை விடுத்தார்.

அவரது மனுவில்,  இந்தியாவில்  400 ஆன்லைன் விளையாட்டுகளுக்கான செயலிகள் உள்ளன. கொரோனா காலத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் 24% அதிகரித்துள்ளன. இதற்கான விளம்பரங்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள மறைமுகமான தாக்குதலாகவே இந்த ‘சைபர் வார்’ உள்ளது. இளைஞர்களை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்கி, இறுதியில் வேறுவழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த போலீஸ்காரர் சரவணன், சென்னையை சேர்ந்த தினேஷ், தெலங்கானாவை சேர்ந்த மதுக்கர், ஆந்திராவை சேர்ந்த வேங்கட அரவிந்த் உள்ளிட்ட 10 பேர் ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

அதுபோல ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி  மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கடந்த  ஜூலை மாதம், வழக்கறிஞர் சூரிய பிரகாசம், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதனை ஊக்குவிக்கும் வண்ணம் விளம்பரங்களில் நடிக்கும் நடிகை தமன்னா, விராட் கோலி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக ஜூலை மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா?, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு சட்ட வரையறை செய்துள்ளதா? கேள்வி எழுப்பியதுடன், ‘ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு 10 நாளில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றும், தெரிவித்துள்ளது.

மேலும்,  கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக   மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.