ஆன்லைன் மளிகைப் பொருள் விற்பனை – பெரியளவில் அதிகரிக்குமாம்!

புதுடெல்லி: நாட்டினுடைய ஆன்லைன் மளிகைப் பொருள் விற்பனை பிரிவின் சந்தை மதிப்பு, இந்தாண்டு இறுதியில் ரூ.22 ஆயிரத்து 220 கோடி என்ற அளவைத் தொடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; நடப்பாண்டின் இறுதியில், ஆன்லைன் மூலமான மளிகைப் பொருட்கள் வர்த்தக பிரிவின் சந்தை மதிப்பு ரூ.22 ஆயிரத்து 220 கோடி என்ற அளவுக்கு வளர்ச்சியை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, அதிகளவிலான நுகர்வோர், ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளனர்.

மேலும், ரிலையன்ஸ் ரீடெய்ல் போன்ற பெரிய நிறுவனங்களின் வரவால், இரண்டாம் நிலை நகரங்களிலும் வளர்ச்சி ஏற்படும். மேலும், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் அதிகளவிலான வளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கும்.

இதுபோன்ற காரணங்களால், மின்னணு மளிகைப் பொருட்கள் வர்த்தகத்தின் மொத்த விற்பனை மதிப்பு, இவ்வாண்டு இறுதிக்குள் 2.6 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.