மதுரை:

ன்லைன் மூலம்  பத்திரப்பதிவு செய்யும்போது, அதற்கு முன்பாக  பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறை நீக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை உறுதி அளித்ததின் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆன்லைன் பத்திரப் பதிவை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த  பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆன்லைன் பத்திரப்பதிவு 100 விழுக்காடு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதில் உள்ள குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நீக்கி வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பத்திரப்பதிவுக்கு முன்னதாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறை இம்மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்றும் பத்திரப்பதிவு துறை தலைவர்  குமரகுருபரன் உறுதியளித்திருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,   ஆன்லைன் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்