கங்கையில் 4 ஆண்டில் 1% மட்டுமே தூய்மை பணி….கூடுதல் செலவு ரூ.50,000 கோடி அதிகரிப்பு

டில்லி:

நிர்வாக கோளாறு, மோசமான கான்ட்ராக்ட் மேலாண்மை, கண்காணிப்பில் தொய்வு காரணமாக ஆறுகள் மேலாண்மை மற்றும் கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்த 5 தேசிய திட்டங்களின் செலவு கூடுதலாக 49 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 5 திட்டங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், இவை அனைத்தும் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விட தாழ்ந்து இருப்பது தெரியவந்தள்ளது. பணி வீழ்ச்சி என்பது 8 முதல் 99 சதவீதம் வரை உள்ளது. இந்திரா சாகர் போலாவரம் மற்றும் கோஷிகுர்த் ஆகிய இரு திட்டங்களை இதில் சேர்ப்பதற்கு முன்பு இதன் செலவு தொகை 32 ஆயிரத்து 802 கோடி ரூபாயாக இருந்தது.

தற்போது மேலும் 49 ஆயிரத்து 840 கோடி ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதர 3 திட்டங்களை நிறைவேற்று முடிப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்துவிட்டது. ஆனால், இதில் ஒரு திட்டம் கூட முடியும் தருவாயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக 2 ஆயிரத்து 314 சதவீதம் செலவு அதிகரித்துள்ளது. இன்னும் 99 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது.

இதற்கு நிர்வாக கோளாறு தான் காரணம் சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. அதனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற மிஷன் அடிப்படையில் நோடல் அதிகாரியை நியமனம் செய்து பணிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஏஜி பரிந்துரை செய்தள்ளது. கான்ட்ராக்ட் மேலாண்மையை சீர்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.