எடப்பாடிக்கு 105 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு! விரைவில் ஆட்சி கவிழும்?

சென்னை,

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில்  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளதால், எதிர்க்கட்சியான திமுக, மீண்டும்  அரசு மீது  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அரசு கவிழ்ந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதன் காரணமாக எடப்பாடி, ஓபிஎஸ் கூட்டணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாகவும், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கவும் வரும் 12ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கபட்டுள்ள சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி இன்று காலை 11 மணி அளவில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் நீங்கலாக 134 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், டிடிவிக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து, இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டது எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு போன்றோர் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது 105 எம்எல்ஏக்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டு, எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக  சட்டமன்றத்தில் திமுக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாது.

ஏற்கனவே, எடப்பாடிக்கு ஆதரவு கிடையாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ள நிலையில், திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் ஆட்சிக்கு எதிராக கவர்னரிடமும், ஜனாதிபதியுடம் மனு கொடுத்து, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ள பரபரப்பான இந்த சூழ்நிலையில்,

எடப்பாடிக்கு  105 எம்எல்க்கள்  மட்டுமே ஆதரவு தெரிவித்து இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தற்போது நீட் அனிதா தற்கொலை காரணமாகவும் தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில், எடப்பாடி தலைமையிலான ஆட்சி தொடருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.