அரசு மருத்துவ கல்லூரிகளில் 12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க இடம்: அதிர்ச்சி தகவல்

சென்னை:

மிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளில் 1337 பேர்  நீட் தேர்வில் வெற்றி பெற்றதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில், 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகாக அகில இந்திய அளவில் தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தததில் இருந்து, மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து உள்ளது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட அதிகமான அளவில் மருத்துவக்கல்லூரிகள் இருந்தும்,  மருத்துவ படிப்பிற்கான இடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெற முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நீட் பயிற்சி தமிழக அரசால் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில்  8,445 மாணவ மாணவிகள் சேர்ந்து படித்து தேர்வு எழுதிய நிலையில், 1337 பேர் தேர்ச்சி பெற்ற தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 12 பேருக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தமிழக அரசு வெளியிட்ட மருத்துவத்திற்கான தர வரிசை பட்டியலில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் என  தனித்தனியாக வெளியிடப்பட்டது.

இந்த, அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் 1-1000 வரையிலான முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும், 1001-3000 வரை 8 பேரும், 3001-5000 வரை 16 பேரும், 5001-10000 வரை 76 பேரும், 10001-15000 வரை 157 பேரும், 15,001-25000 வரை 1,059 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் 1337 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்றதாக பெருமிதமாக தெரிவித்த நிலையில், தற்போது 12 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பிருப்பதாக தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம்  தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.