சென்னை:  நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்ற சென்னை வேளச்சேரி 92வது எண் வாக்குச்சாவடியில் 186 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நடைபெற்று முடிந்த  234 சட்டசபைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 72.8% வாக்குகள் பதிவானது. ஆனால், மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட 92வது  எண் வாக்குச்சாவடியில் 548 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் இருந்த நிலையில் வெறும் 186 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த தினத்தில் இரவு நேரத்தில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, அரசியல் கட்சியினர் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவை பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று விளக்கம் அளித்த பின்னரும் அரசியல் கட்சியினரின் வலியுறுத்தியதால் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது., அப்போது, அதில், 15 வாக்கு ஒப்புகைச்சீட்டு பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதியானவர்கள் 548  பேர் உள்ள நிலையில்,  வெறும் 186 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 6ந்தேதி நடைபெற்ற தேர்தலின் போது 220 பேர் வாக்களித்த நிலையில், நேற்று நடைபெற்ற மறு தேர்தலில் வாக்குப்பதிவு மேலும் குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படித்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வேளச்சேரி பகுதியில் பெரும்பாலோர் வாக்களிக்க வராமல் புறக்கணித்துள்ளது , ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின்மையை வெளிக்காட்டி உள்ளது.