சென்னை:

நாடு முழுவதும் வரும் 27ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம்  பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

காற்று மாசு ஏற்படுவதை குறைக்கும்  தீபாவளியன்று காலை ஒரு மணி நேரமும் இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாசுக்கள் அதிகரிப்பின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படு வதாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி அன்று தலைநகர் தில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. அதையடுத்து நாடு முழுவதும் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 23ந்தேதி அன்று  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு விதிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் அமர்வு  உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து,  தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், நீதிமன்ற வளாகம் மற்றும் கல்விக் கூடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவுவரை பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு அதிக புகையை வெளியேற்றும் பட்டாசுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.