கொச்சி: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக  நடை திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தினசரி 250 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில்  அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற முக்கியக் கோவிலான சபரிமலை அய்யப்பன் கோவில் கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. விசேஷ காலங்களில் நம்பூதிரி உள்பட ஒருசில நபர்களைக்கொண்டு கோவிலில் பூஜை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்துக்குஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இன்று ஐப்பசி மாத பூஜை தொடங்கி உள்ள நிலையில்,  தினசரி 250 பேர் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும் என்று தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மாதம் தோறும் முதல் 5 நாட்கள் நடை திறக்கும்போது, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும் நிலையில், 250 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றுமுதல் நாள்தோறும் ஆன்லைன் வழியாக முன்பதிவு  250 பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தங்களது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மலை ஏறும் போது முக கவசம் அணிய தேவை இல்லை. மற்ற நேரங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். ஆனால் மலை ஏற உடல் தகுதி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் குளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் மேல்சாந்திகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய மேல்சாந்தி தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதற்கான நேர்காணல், அக்டோபர் 5, 6 தேதிகளில் திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைமையகத்தில் நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில், புதிய மேல்சாந்திகள் இன்று காலை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, ஏற்கனவே மாளிகைபுரம் மேல்சாந்தியாக இருந்த ஜெயராஜ் பொட்டி, சபரிமலை மேல்சாந்தியாகவும், அங்கமாலியைச் சேர்ந்த ரெஜிகுமார் மாளிகைபுரம் மேல்சாந்தியாகவும் தேர்வாகி உள்ளனர்.

மேலும், அடுத்த மாதமான,  கார்த்திகை மாதத்தில், மகர மண்டல பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.   அடுத்த மாதம் 16-ஆம் தேதி மகர மண்டல காலம் தொடங்க இருப்பதால், அந்த சமயத்தில் தினசரி 1000 பக்தா்களை அனுமதிக்க கேரள அரசும் தேவசம் போர்டும் முடிவு எடுத்துள்ளது.