புதுடெல்லி: தனியார் ஆய்வகங்களில் வெறும் 30% அளவிற்கான கொரோனா பரிசோதனை திறன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று தனியார் ஆய்வக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனியார் பரிசோதனை சாலைகளைவிட, அரசு பரிசோதனை சாலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர் என்ற இந்தியாவின் மிகப்பெரிய பரிசோதனை ஆய்வகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வகம் சார்பில் கூறப்படுவதாவது, “தனியார் ஆய்வகங்களில் இருக்கும் பரிசோதனை திறன்களில் வெறும் 30% அளவிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எங்களால், அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இந்த விஷயத்தில், அரசு – தனியார் துறை ஒருங்கிணைப்பு ஏற்பட வேண்டும். ஆனால், அந்த நிலை இன்னும் சரியான அளவில் ஏற்படவில்லை.

எங்களால் ஒருநாளில் 5000 கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அந்த திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக முதன்முதலில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும்.