பெய்ஜிங்: சீனாவில் 45 பல்கலைக்கழகங்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் வழங்கவும், வெளிநாட்டு மாணவர்களை (இந்தியர் உட்பட) சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சீன கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், அந்த மருத்துவப் பட்டப்படிப்பை ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 2019ம் ஆண்டிற்கான சேர்க்கை துவங்கவுள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் சீன மருத்துவக் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கவுள்ளார்கள் என்ற நிலையிலும் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், பட்டியலில் இடம்பெறாத பல்கலைகள், மருத்துவப் படிப்பில் வெளிநாட்டு மாணாக்கர்களை சேர்க்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. சீன கல்வி அமைச்சக வலைதளத்தில், பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர்களைக் காணலாம்.

கடந்த 2018ம் ஆண்டில் மட்டும், சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணாக்கர் எண்ணிக்கை 21,000 ஐ தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் வெளிநாட்டு மாணாக்கர்களை சீனா அனுமதிக்க தொடங்கியதிலிருந்து, இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை.