கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே அனுமதி… ஐசிஎம்ஆர்

டெல்லி:

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், இறந்தவர்களின் உடலை புதைத்தபிறகு, அதன்மேல், சிமென்ட் பூச்சு போட்டு பூச வேண்டும் உள்பட பல நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அவசர சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்தால், அவர்களையும் கொரோனா பாதித்தவர் என்று சந்தேகித்து  பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று பாதித்தவர் என்று கருதப்படும் ஒருவர், பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இறந்துவிட்டால், அவரது உடலை முடிவுகள் வெளியாகும் வரை வெளியேற்றக் கூடாது 

முடிவுகளில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உயிரிழந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு மூட வேண்டும்.

பின்னர் இறந்தவரின்  உடலை மாவட்ட நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நிர்வாக அலுவலர்கள், உயிரிழந்தவரின் உடலை அவரது உறவினர்கள்  உடன் அடக்கம் அல்லது தகனம் செய்யும்போது அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

இறுதி நிகழ்வில் ஐந்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்குபெறக் கூடாது.

உயிரிழந்தவரின் உடலில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டே நிற்கவேண்டும்.

இறுதிச்சடங்கின்போது, உயிரிழந்தவரின் உடலைத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

6 முதல் 8 அடி ஆழம் வரை குழி தோண்டி உயிரிழந்தவரின் உடலைப் புதைக்க வேண்டும்.

புதைக்கப்பட்ட இடத்தின்  மேற்புறத்தில் சிமெண்ட் பூச்சு பூச வேண்டும்.

மின்தகன மையத்தில் தகனம் செய்தால் சாம்பலை சம்பிரதாய சடங்குகளுக்காக எடுத்துக்கொள்ளலாம்.

உயிரிழந்தவரின் உடைகள், அணிகலன்களை நடைமுறைகளின்படி அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளது.