அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களில் 50% மட்டுமே தேர்ச்சி? தேர்வுத்துறை இயக்குநர் அதிரடி உத்தரவு

சென்னை:

ரசு பள்ளிகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட (2019ம் ஆண்டு)  10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில்  50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அரசாணையின்படி தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு, ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படை யில், 80 சதவீத மதிப்பெண் வழங்கப்படும். மாணவர்களின் வருகைப் பதிவு அடிப்படையில்,  20 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு வருகிறது. பல தனியார் பள்ளிகள், பெயிலான மாணாக்கர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், அரசு பள்ளிகளில் படித்து 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதிய  மாணவர்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கணக்கிட்டால்,  சுமார் 50 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், மீதமுள்ள 50 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், அரசாணையின் படி தேர்ச்சி வழங்க  அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி ஆணை பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதேபோல் 11ம் வகுப்பிலும் வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்புவியியல் பாடங்களில், காலாண்டு அரையாண்டில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கும்படி மாவட்ட முன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.