நாட்டில் 66 சதவீத நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன…..அதிர்ச்சி தகவல்

டில்லி:

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 17.79 லட்சம் நிறுவனங்களில் 66 சதவீத நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சக புள்ளவிபரங்களின் படி நாட்டில் 17.79 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 826 நிறுவனங்கள், அதாவது 66 சதவீத நிறுவனங்கள் மட்டுமே கடந்த ஜூன் 30ம் தேதி வரை செயல்பாட்டில் உள்ளன.

இவை மட்டுமே முறையாக தங்களது செயல்பாடுகள் குறித்த விபரங்களை பங்கு சந்தைக்கு குறிப்பிட்ட காலத்தில் வழங்கி வருகின்றன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 5.43 லட்ச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆயிரத்து 390 நிறுவனங்கள் செயலற்றுவிட்டன என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 38 ஆயிரத்து 858 நிறுவனங்கள முடக்கப்பட்டுள்ளது. இதில் 103 நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 ஆயிரத்து 117 நிறுவனங்கள் இணைப்புக்காக காத்திருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.7 லட்சம் நிறுவனங்கள் சேவை தொழிலிலும், 2.36 லட்சம் நிறுவனங்கள் தயாரிப்பு உள்ளிட்ட இதர பணிகளிலும் ஈடுபடுகின்றன. சேவை தொழிலில் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, சட்டம் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 34 ஆயிரத்து 151 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. டில்லியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 286 நிறுவனங்களும், மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 336 நிறுவனங்களும் செயல்பாட்டில் உள்ளது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கருப்பு பணத்தை பரிமாற்றம் மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவை சட்ட விரோத பணி பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017-18ம் ஆண்டில் 2.26 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தொழில் புரியாமல் உள்ளன என்றும், அவை போலி நிறுவனங்கள் என்பது அடையாளம் காணப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.