ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மூடப்பட்டிருந்த அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் இன்றுமுதல் செயல்படும் என்று மாநில கவர்னர் மாலிக் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 190 பள்ளிகளில் 95 பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ள நிலையில், பெரும்பாலான மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ஆக.5ம் தேதி ரத்து செய்யப்பட்டு,  அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

10 நாட்களுக்கும் மேலாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ஸ்ரீநகர் உள்பட சில இடங்களில் இணைதள சேவைகள் தொடங்கப்பட்டது. இன்று முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 190 பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று சுமார் 95 பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி இருப்பதாகவும், ஒருசில மாணவர்கள் மட்டும் சில பள்ளிகளுக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அங்கு சில பகுதிகளில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டன.

இதுகுறித்து கூறிய, காவல்துறை துணை ஆணையர் சாகித் இக்பால், பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த பின்பு, ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள 900 ஆரம்பப் பள்ளிகளில் 196 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு இருப்பதாகவும்,  கொஞ்சம், கொஞ்சமாக மற்ற பள்ளிகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று முதல் செயல்படுகின்றன என்றும்  தெரிவித்து உள்ளார்.