சென்னை:  திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னையில் நடத்தப்பட உள்ள அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என திமுக தலைமை மறுப்பு தெரிவித்து உள்ளது.

டிசம்பர் 6ந்தேதி சென்னை ஒம்.எம்சிஏ திடலில் திமுக சிறுபான்மையினர் அரசியல் மாநாடு நடைபெற  இருப்பதாக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர்  மஸ்தான்  தெரிவித்திருந்தார். அதன்படி,  வரும் 6ந்தேதி  சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ‘இதயங்களை இணைப்போம்’  என்ற பெயரில் அரசியல் மாநாடு நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், அத்துடன்,  ஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. மஸ்தான் ஓவைசியுடன் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதனால், ஓவைசி திமுக சிறுபான்மையினர் மாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், திமுக மாநாட்டில் கலந்துகொள்ள அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை மறுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து,   திமுகழக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர்  மஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2020 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.