பாஜகவால் மட்டுமே அயோத்தியில் ராமர்கோவில் கட்ட முடியும்! ஆதித்யநாத்

லக்னோ:

2019ம் ஆண்டு நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை யில்,  ராமர் கோவில் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உ.பி. சட்டமன்ற தேர்தலின்போது,  சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. அதுபோல மத்தியில்  பாஜ ஆட்சிக்கு வந்தால் ராமர்கோவில் கட்டுவோம் என்று அறிவித்திருந்தது.

ஆனால், பாஜக ஆட்சி பதவி ஏற்று நான்கரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் ராமர்கோவில் கட்டப்படாதது ஒரு தரப்பினரிடையே பாஜக மீதான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மீண்டும் ராமர்கோவில் பிரச்சினையை வடமாநில கட்சிகள் சில எழுப்பி வருகின்றன.

மத்தியில் மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது.  கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து அரசை எழுப்ப எங்களது கட்சி சார்பில் போராடி வரு கிறோம். ஆனால்,  4½ ஆண்டுகளாக ராமர் கோவில் கட்ட எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

மேலும்,  முன்னாள் விசுவ இந்து பரிஷத் தலைவரும், ‘அந்தராஷ்டிரியா இந்து பரிஷத்’ அமைப்பின் தலைவருமான பிரவீன் தொகாடியா,  தற்போதைய மோடி அரசு இந்துக்களுக்கான அரசு இல்லை என்றும், மோடி ஆட்சிக்கு வரும்போது அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ராமர் கோவில் கட்ட முடியும், அதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும்  என்று உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

ராமர் கோவில் இடம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி