அரசின் உதவி மட்டுமே ஆட்டோமொபைல் தொழில் வாழ உதவும் : தொழிலதிபர்கள் கருத்து

--

டில்லி

கொரோனா மற்றும் ஊரடங்குக்கு முன்பிருந்தே பாதிக்கப்பட்டுள்ள வாகன உற்பத்தி தொழிலுக்கு அரசின் உதவி மட்டுமே வாழ உதவும் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மார்ச் 25 முதல் முழுவதுமாக நின்றுள்ளது.   நாட்டின் பொருளாதாரத்தில் இதனால் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது   இந்த ஊரடங்குக்கு முன்னால் இருந்தே கடும் சரிவைச் சந்தித்துள்ள வாகன உற்பத்தி தொழில் அதிபர்கள் சமீபத்தில் ஒரு கலந்தாய்வு நடத்தி உள்ளனர்.

இதில் வாகன உற்பத்தி தொழிலின் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்களான மாருதி சுசுகியின் பார்கவா, விக்ரம் கிர்லொஸ்க்ர்,  வாகன உற்பத்தி தொழிலதிபர் சம்மேளன தலைவர் ராஜன் வதேரா, எம் ஜி மோட்டார் தலைவர் ராஜிவ் சபா உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர்.   அப்போது வாகன உற்பத்தி தொழிலைச் சீர் செய்யத் தேவையானது குறித்து விவாதித்தனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு :

தற்போதுள்ள விலைவாசி உயர்வில் தொழில் நிறுவனங்கள் 50% உற்பத்தியை மட்டும் கொண்டு தொழில் நடத்த முடியாது.  எனவே அரசு உடனடியாக நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்க வேண்டும்.  அத்துடன் ஜிஎஸ்டி விலக்கு, மற்றும் உட்கட்டமைப்பு செலவுக்கு வரி விலக்கு ஆகியவையும் அவசியம் அளிக்க வேண்டும்

வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது அவரவர் சொந்த மாநிலத்துக்குச் சென்று விட்டனர்.  எனவே ஆட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க சில நிறுவனங்கள் கிராமப்புறங்களுக்குத் தொழிற்சாலையை மாற்ற எண்ணலாம்.  அவர்களுக்குத் தொழிலகங்களை வேறு இடங்களில் அமைக்க  தேவையான உதவிகளை அரசு அளிக்க வேண்டும்.

தற்போது ஊரடங்கு காரணமாக மாசுக்குறைவை மக்கள் அனுபவித்து வருகின்றனர்  எனவே  வாடிக்கையாளர்கள் மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களையே இனி பயன்படுத்த விரும்புவார்கள்  எனவே ஒரு சில நிறுவனங்கள் விலை குறைவான மின்சாரத்தில் இயங்கும் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்கள் தயாரிக்க இருக்கும் போது அதற்கான உதவிகளை அரசு அளிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாகவே வாகன தொழிற்சாலைகளில் அதிக அளவில் லே ஆஃப் விடப்பட்டுள்ளது.  எனவே அதிக அளவில் ரொக்க நிதி இருக்க வாய்ப்பு இருக்காது.  தற்போது உற்பத்தி செலவுகளைக் குறைக்க வேண்டி உள்ளதால் நிறுவனங்களுக்கு ரொக்க நிதி அதிக அளவில் தேவைப்படும்.   அதற்கான உதவிகளை அரசு செய்தாக வேண்டும்.

மேலே குறிப்பிட்ட உதவிகளை அரசு செய்தால் மட்டுமே வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உயிர் பிழைக்கும்” என தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன