மிதமான தொற்று உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை

டில்லி

மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை  அளிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது.   இந்தியாவின் தலைநகரான டில்லி கொரோனா எண்ணிக்கை வரிசையில் மூன்றாவதாக உள்ளது.   இங்கு சுமார் 43000 பேர் பாதிக்கப்பட்டு 1400 பேர் உயிர் இழந்துள்ளனர்.   குணமடைந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரமாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளது.

இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிப்பதில்லை எனப் பல புகார்கள் எழுந்துள்ளன.  டில்லி அரசு மருத்துவமனைகளில் பல படுக்கைகள் காலியாக உள்ள போதிலும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.  டில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் உயிரிழந்தோர் உடல்கள் கவனிப்பாரற்று கிடப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நீதிமன்றமும் இது குறித்து கடும் விமர்சனம் எழுப்பி வருகின்றன     இதையொட்டி மத்திய மற்றும் டில்லி மாநில அரசு இணைந்து கொரோனா சிகிச்சைக்குப் பல தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன   அவற்றில் ஒன்றாக ரயில் பெட்டிகள்  கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

வடக்கு ரயில்வே அதிகாரி ஒருவர், “டில்லியில் இன்று ஒரே நாளில் 300 ரயில் பெட்டிக்ளை கொரோனா சிகிச்சைக்கு அளித்துள்ளோம்  இந்த பெட்டிகளில் உள்ள படுக்கைகள் மூலம் 8 ஆயிரம் பேருக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.  இந்த ரயில் பெட்டிகளில் மிதமான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.  டில்லி மாநில அரசு நிர்வாகம் ரயில் பெட்டிகள் பராமரிப்பை மேற்கொள்ள உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.