திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளையும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில் அரசின் தொடர்ந்த திட்டமிடுதல், துரித நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு ஆகிய காரணங்களினால் நோய் தொற்று பாதிப்புகளின் விகிதம் முன்பை விட குறைந்து கொண்டே வருகிறது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கேரளாவில் இன்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம், மாநிலத்தில் கொரோனா வைரசால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. அதில், 167 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.