யாங்கோன்:

மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தேர்தல் இன்று நடைபெற்றது.

மியான்மர் நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி அமோக வெற்றி பெற்றார்.எனினும், அரசியல் சாசன சிக்கல் காரணமாக அவரால் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. அதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட அரசு தலைவர் பதவியை அவர் வகித்து வருகிறார்.

இந்த நிலையில் மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தேர்தல் இன்று நடைபெற்றது. ராணுவத்துக்கு முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. அந்நாட்டு நேரப்படி காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், தற்போதைய அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆட்சியில் ராணுவத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து ஜனநாயகத்தை மேம்படுத்த அவர் தவறியதாக கருத்து நிலவுகிறது. எனவே, கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு ஆங் சான் சூகிக்கு இந்தத் தேர்தலில் அமோக ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியை எதிர்த்து, தான் டே தலைமையிலான ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி போட்டியிடுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.