இடாநகர்: ஒரே ஒரு வாக்காளர், தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்பதற்காக, அடர்த்தியான காட்டையும் கரடு-முரடான மலைப் பாதைகளையும் கடந்துசென்று பணியாற்றுகின்றனர் தேர்தல் அலுவலர்கள்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஹயுலியாங் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட மலோகம் என்ற ஒரு தொலைதூர கிராமத்தில் வாழ்கிறார் சொகேலா தயாங் என்ற 39 வயதான பெண் வாக்காளர்.

அவரின் கணவர் உள்பட அந்த ஊரில் வசிக்கும் வேறுசிலர், வேறு வாக்குச்சாவடிக்கு தங்களின் பெயர்களை மாற்றிவிட, இவரின் பெயர் மட்டும் அதே வாக்குச்சாவடியில் நீடிக்கிறது. எனவே, இந்த ஒரு நபரின் வாக்கு பதிவுசெய்யப்படுவதற்காக, தேர்தல் அலுவலர்கள் கடுமையான பணியை செய்கிறார்கள்.

வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு, கடுமையான பயணத்தை மேற்கொள்கிறார்கள். காடுகள் மற்றும் கரடு முரடான மேடுகளை தாண்டிச் செல்கிறார்கள்.

இந்த இடம் சீன எல்லையருகே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி