Random image

தேர்தலுக்காக மக்களைப் பிரிக்காதீர்கள்!: ஒபாமா அறிவுரை

“தேர்தலுக்காக மக்களைப் பிரிக்காதீர்கள். பிரித்தால் பிறகு அவர்களை ஒன்றுபடுத்த முடியாது” என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இது இந்தியாவுக்கும் பொருந்தும் என்று ட்விட்டர் தளத்தில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

அமெரிக்க மாகாண தேர்தலில் தனது ஜனநாயக கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், “தேர்தலுக்காக மக்களைப் பிரிக்காதீர்கள். அப்படி பிரித்தால் மீண்டும் அவர்களை ஒன்றிணைக்க முடியாது” என்று பேசினார்.

இது தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு விடும் எச்சரிக்கையாகவே  பார்க்கப்படுகிறது.

இனவெறியைத் தூண்டியே, டிரம்ப் வெற்றி பெற்றார் என்ற விமர்சனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு, மெக்சிகோ அமெரிக்கா இடையே பெருஞ்சுவர், முஸ்லிம்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றுவது என்று சிறிது நம்பிக்கையும் நிறையவே இன வெறியையும் ட்ரம்ப் வாக்களித்தார்.

அதற்கேற்ற வகையிலேயே ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் அகதிகளாக குடியேறியவர்களை, “மிகமோசமான அருவருக்க தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும். அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்” என்று ட்ரம்ப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கேற்றாற்போல, அமெரிக்க எல்லைக்குள் புக முயன்ற வெளிநாட்டு அகதிகளின் குடும்பத்தை தற்போது அமெரிக்க அரசு பிரித்து வருகிறது. இதுவும் கண்டனத்துக்குள்ளாகிவருகிறது.

மேலும் பல வருடங்களாக அமெரிக்காவில் வசிப்போரையும் நாட்டைவிட்டு வெளியேற்ற ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

இது போல அவரது பல நடவடிக்கைகள் இனவெறியைத் தூண்டுவதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள (வெள்ளை) நிற வெறியர்களை மகிழ்விக்கும் விதமாக இப்படி ட்ரம்ப் நடந்துகொள்கிறார் என்பது கண்கூடு.

அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அளவிலும் டிரம்ப் வெற்றி இனவெறிக்கான வெற்றியாக பார்க்கப்பட்டது.

டிரம்ப் வெற்றி பெற்றவுடனேயே,  இஸ்ரேலின் வலது சாரி கூட்டமைப்பின் முக்கியமானவரும் இஸ்ரேலின் கல்வி அமைச்சரூமான நஃப்டி பென்னட் என்பவர், “டிரம்பின் வெற்றி ஃபலஸ்தீன் நாடு என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்ய இஸ்ரேலுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு” என்றார்.

அதைப்போலவே பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றினார் ட்ரம்ப்.

இந்த நிலையில்தான், “தேர்தலுக்காக மக்களை பிரிக்காதீர்கள்” என்று ஒபாமா எச்சிரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுவரும் பலரும், “ஒபாமா கூறியது இந்தியாவுக்கும் பொருந்தும்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பசுவதை தடுப்புச் சட்டம், பசு பாதுகாவலர்கள், பசுவை கொன்றதாக புரளி கிளப்பி இஸ்லாமியர் மற்றும் தலித் மக்களைக் கொல்வது ஆகியவற்றை ட்விட்டர் பதிவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“தான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியி இந்தியர்கள் பதுக்கி இருக்கும் கறுப்புபணத்தை மீட்டு ஆளுக்கு தலா 15 லட்ச ரூபாய் அளிப்பேன்” என்று மார்தட்டினார் மோடி. ஆனால் அவரது ஆட்சியில்தான் கறுப்புபணம் சுவிஸில் பெருகியிருக்கிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாதவகையில் சரிந்துள்ளது. நாடு முழுதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதையெல்லாம் மறைக்க மதவெறியைத் தூண்டிவிடுவதிலேயே மோடியும், பாஜகவும் குறியாக இருக்கிறார்கள்.

இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.  உ.பி., கர்நாடக தேர்தல்களின் போது அவர்களது பேச்சு மதவெறியைத்தூண்டுவதாகத்தான் இருந்தது.

ஆகவே ஒபாமாவின் பேச்சு இந்தியாவுக்கும் பொருந்தும்” என்று ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.