திருவனந்தபுரம்:
காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் கேரளாவின் பூஜாப்புராவில் உள்ள புத்துப்பள்ளி இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அவரை வரும் வியாழக்கிழமை இரவு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் மார்ச் நடுப்பகுதியில் வேட்புமனு பட்டியல் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் கேரளா முழுவதும் பயணம் செய்தார்.

உம்மன் சாண்டிக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது, இருப்பினும் கோட்டையத்தில் உள்ள புத்துப்பள்ளியில் வாக்களித்த பின்னர் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று திருவனந்தபுரத்தை அடைந்தார்.

குமாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தைச் சேர்ந்த சுகாதார தொழில்நுட்ப வல்லுநர்கள் அவரது மாதிரிகளை எடுத்துக் கொண்டதை அடுத்து அவர், இன்று தனது வீட்டில் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்திருந்தார்.

இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கபட்டுள்ளனர்.