ஊட்டி:

கோடை விடுமுறையையொட்டி ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே மாதம் 18ந்தேதி தொடங்குவதாக தோட்டக்கலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோடை விழாவையொட்டி வருடந்தோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தஆண்டு மலர் கண்காட்சி நடத்துவது குறித்து,  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குனர்  அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,  தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் , கலெக்டர் இன்னசென்ட் திவ்யா  மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

122-வது ஊட்டி மலர் கண்காட்சி நடத்துவது குறித்து விவாதித்து முடிவு எடுத்ததாகவும், அதன்படி 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி  மே மாதம் 18-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும், ஊட்டி சீசனை அனுபவிக்க வரும்  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில்,  மாவட்ட நிர்வாகம் , சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, சென்னை ரேஸ் கிளப் சார்பில், தமிழ் புத்தாண்டு தினத்தன்று குதிரை பந்தயம் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் நடக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழா, தேயிலை சுற்றுலா விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறினார்.

மேலும்,

 

மே மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 10-வது காய்கறி கண்காட்சி

ஊட்டி ரோஜா பூங்காவில் 12 மற்றும் 13-ந் தேதிகளில் 16-வது ரோஜா கண்காட்சி

 கூடலூரில் 11, 12 மற்றும் 13-ந் தேதிகளில் 8-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 18, 19 மற்றும் 20-ந் தேதிகளில் சர்வதேச புகழ்பெற்ற 122-வது மலர் கண்காட்சி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் 60-வது பழக்கண்காட்சி

மேலும் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சியில் சிறப்பான மலர் அலங்காரங்கள் அமைப்பது குறித்து தோட்டக்கலை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.