Random image

ஊட்டி: விஷம் வைத்து புலியை   கொன்றவருக்கு சிறை

விஷம் வைத்து புலியை கொன்றவருக்கு 3 வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மலையடி வாரத்தில் உள்ள தெங்குமரகடா கிராம வனத்திற்குள் கடந்த 2014-ஆம் வருடம் ஜூன் 20-ஆம் தேதி புலி ஒன்று சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தது. இறந்த புலியின் அருகில்  எருமை மாடு ஒன்றின் உடலும் சிதைந்து கிடந்தது. இதைக் கண்ட வனத்துறையினருக்கு புலியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

வனத்துறையினரின் விசாரணையில் திமையன் என்ற விவசாயி புலியை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. 60 வயதாகும் விவசாயி திமையன், தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.  அவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று மேய்ச்சலுக்காக வனத்திற்குள் சென்றபோது புலி கடித்து குதறியதில் அது பலியானது.  எருமையை பாதி தின்றுவிட்டு அந்த புலி அங்கிருந்து சென்றுவிட்டது. தன் எருமை உயிரிழந்த விரக்தியில் புலியை கொல்வதற்காக எருமையின் உடல் மீது விஷத்தை வைத்தார் திமையன். மிச்சம் மீதி இருந்த எருமைக் கறியை திண்பதற்காக மீண்டும் அங்கு வந்த புலி மீண்டும் தின்றது. இதையடுத்து விஷத்தால்  புலி பலியானது.

விசாரணையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து  திமையன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த கோத்தகிரி நடுவர் மன்ற நீதிபதி ஸ்ரீதர், திம்மையனுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் பத்தாயிரத்து ஐநூறு 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.